மின் இணைப்பு பெயர் மாற்றம் விரைவில் இணையதளத்தில்

மின் இணைப்பு பெயர் மாற்றத்தை, இணையதளம் மூலம் மேற்கொள்ளும் சேவையை, மின் வாரியம் துவக்க உள்ளது. மின் வாரிய அலுவலகங்களில், புதிய மின் இணைப்பு கோரி வரும் மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இதையடுத்து, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டத்தை, மின் வாரியம், 2016 ஆகஸ்டில் துவக்கியது. தற்போது, புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு மாற்றம், தற்காலிக மின் இணைப்பு ஆகியவற்றுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இந்நிலையில், கூடுதலாக, மின் இணைப்புக்கான பெயர் மாற்றத்தை மேற்கொள்ளும் சேவையையும், இணையதளத்தில் துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறு ஒருவரின் பெயருக்கு மாற்ற, பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பம் தர வேண்டும். அதனுடன், பெயர் மாறியுள்ள சொத்து விபரம், சொத்து வரி, வாரிசு சான்றிதழ் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். நுகர்வோர், முறையாக ஆவணங்களை வழங்கினாலும், ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் வருகிறது.எனவே, மின் இணைப்பு பெயர் மாற்றமும், இணையதளம் மூலம் செய்யும் வசதி விரைவில் துவங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments: