"ஊரெல்லாம் வெளிச்சம்; இவர்கள் உயிரோ ஊசலாட்டம்"
--------------------------------------------------------------------------------
இரவு 11 மணி. கனமழை பெய்கிறது. தர்மபுரி மாவட்டத்தின் மின்வாரிய அலுவலகம் ஒன்றில் இரவு நேரப்பணியில் இரு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கிராமத்தில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பதாக தொலைபேசி வழியாகப் புகார் வருகிறது. அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, 9 கி.மீ. தொலைவில் உள்ள அந்தக் கிராமத்திற்கு இருவரும் புறப்படுகின்றனர். பழுதை சரிசெய்துவிட்டு திரும்பி வருவதற்கு நள்ளிரவு இரண்டரை மணியாகி விட்டது. மறுநாள் காலையில் மின்வாரிய அலுவலக வாசலில் ஒரே களேபரம். சுமார் 50 பேர் கூட்டமாக வந்து தகராறு செய்கின்றனர். அவர்களின் பகுதியில் இரவு 11.30 மணிக்கு மின்தடை ஏற்படுகிறது. தொலைபேசி மூலம் புகார் செய்ய முயல்கின்றனர். தொலைபேசி மணி ஒலித்தும், அதை யாரும் எடுக்கவில்லை. நேரில் புகார் செய்ய வந்தபோது அலுவலகம் பூட்டிக் கிடக்கிறது. இதுதான் அவர்களின் கோபத்திற்குக் காரணம். குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, ஒரு வீட்டின் மின் இணைப்பைத் துண்டிப்பதற்காக வயர்மேன் செல்கிறார். வீட்டின் உரிமையாளரோ, ஓர் அரசியல் பிரமுகர். ‘பணத்தை நாளைக்குக் கட்டுகிறேன்’ என்கிறார். ‘சரி’ என்று, வயர்மேன் திரும்பிவிடுகிறார். இரண்டாம் நாள் வயர்மேன் செல்கிறார். ‘நாளைக்குக் கட்டிவிடுகிறேன்’ என்கிறார் அரசியல்வாதி. வயர்மேன் திரும்பிச் செல்கிறார். மூன்றாம் நாள் செல்லும்போது, ‘பணம் கட்ட முடியாது. உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்’ என்று மிரட்டுகிறார் அந்த அரசியல் பிரமுகர். மேலதிகாரிக்கு வயர்மேன் தகவல் தெரிவிக்கிறார். ‘கன்ஸ்யூமர் சொல்வதைக் கேட்டுவிட்டு வருவதா உன் வேலை?’ என டோஸ் விழுகிறது. உடனே, மின் இணைப்பை வயர்மேன் துண்டித்துவிடுகிறார். அதனால் ஆத்திரமடைந்த அரசியல் பிரமுகர், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி வயர்மேனை இடமாற்றம் செய்துவிடுகிறார்.
ஒரு துணை மின்நிலையத்தில் இருந்து மற்றொரு துணை மின்நிலையத்திற்கு இணைப்பை ஏற்படுத்துவதற்காக மின்கம்பி இழுக்கப்பட்டிருந்தது. இரண்டாவது துணை மின்நிலையத்தில் மின் சப்ளை நிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரிகள் கீழே நின்றுகொண்டு, தினக்கூலித் தொழிலாளர் ஒருவரை கம்பத்தில் ஏறச்சொல்கிறார்கள். கம்பத்தில் ஏறிய தினக்கூலித் தொழிலாளி திடீரென்று மின்சாரம் தாக்கப்பட்டு தூக்கிவீசப்படுகிறார். முதல் துணை மின்நிலையத்தில் இருந்து இழுக்கப்பட்டிருந்த கம்பியில் மின் சப்ளை இருந்த விவரம் அதுவரை யாருக்கும் தெரியவில்லை. அதுதான் விபத்திற்குக் காரணம். மரணமடைந்த தினக்கூலித் தொழிலாளிக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இத்துயரச் சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்தது. ஒருபுறம் பணிகளும் அது தொடர்பான சுமைகளையும் அதிகரித்துக்கொண்டிருக்கும்போது, அதற்கேற்ப தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். ஆனால், குறைந்து கொண்டு வருகிறது. அதனால், மின்வாரியத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல........ முன்பெல்லாம், ஒரு பிரிவிற்கு ஏழு வயர்மேன், ஏழு உதவியாளர்கள், ஒரு லைன்மேன், இரண்டு ஃபோர்மேன்" என மொத்தம் 17 பேர் இருப்பார்கள். இன்றைக்கு ஒரு பிரிவிற்கு ஒரு வயர்மேன் இருந்தாலே அதிசயம். ஒரு பிரிவில் சுமார் 150 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. அவற்றைப் பராமரிக்க, இரண்டு மூன்று ஊழியர்கள் போதுமா? பிரேக் டவுன், ஃப்யூஸ் ஆஃப் கால் என ஒவ்வொன்றையும் எத்தனை மணி நேரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கால நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், போதிய தொழிலாளர்கள் இல்லாததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளைச் செய்ய முடிவதில்லை. வயர்மேன்கள் இல்லாததால் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை மஸ்தூர் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் செய்கின்றனர். அவர்களுக்கு ஃப்யூஸ் போடுவதற்கான அதிகாரமே கிடையாது. ஆனாலும் வேறு வழியில்லை" என்று ஆதங்கப்படுகிறார்
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மின் ஊழியர் ஒருவர். பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், வேலைப்பளு பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வடைந்து விடுகின்றனர். டென்ஷன், மன உளைச்சல் ஆகியவற்றுடன் வேலை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்கிற மேலதிகாரியின் நிர்ப்பந்தம் வேறு. இச்சூழலில், பணிகளை நிதானமாக செய்யக்கூடிய மனநிலை இருப்பதில்லை. மின்சாரத்தை நிறுத்திவிட்டு வேலை செய்ய வேண்டும் என்பதைக்கூட மறந்துவிடுகிறார்கள். இப்படியாக, பல தொழிலாளர்களின் உயிர் பரிதாபமாகப் பறிபோகிறது. ஒவ்வொரு கம்பியாளரும் 12 டிரான்ஸ்பார்மர்களை பராமரித்து வந்தனர். இப்போது, ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 5 டிரான்ஸ்பார்மர்கள் என அதிகரித்துக்கொண்டே போகிறது. டிரான்ஸ்பார்மர் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரிவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். அதற்கேற்ப, துணை மின் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பணிச்சுமை அதிகரிக்காது, பழுது உள்ளிட்ட பணிகளை உடனுக்குடன் செய்துவிட முடியும். ஆனால் நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் போதே, புதிதாக இன்னொரு வேலையைக் கொடுத்துவிடுகிறார்கள். மின்சாரத்தில் வேலை செய்யும் நாங்கள் ஒவ்வொரு நாளும் டென்ஷனுடன் பணி செய்ய வேண்டியிருக்கிறது. 24 மணி நேரமும் மனஉளைச்சலில் உழன்று கொண்டிருக்கிறோம். உடல் ரீதியாகவும் சோர்வடைந்து விடுகிறோம். வேலை செய்யும்போது டென்ஷன் ஏற்பட்டால் தவறு நிகழ்ந்துவிடுகிறது. தவறு நிகழ்ந்தால் உயிருக்கு ஆபத்து. மின்சாரத்துடன் விளையாட முடியுமா? அமைதியான மனநிலையோடு, பாதுகாப்பாக வேலை செய்ய முடியாத சூழலில் சிக்கியிருக்கிறோம்" என்கிறார்
சிவகங்கையைச் சேர்ந்த மின் ஊழியர் ஒருவர். புதிய இணைப்புக்கான கம்பங்கள் நடுவது, கம்பி இழுப்பது போன்ற விரிவாக்கப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த ஆட்சியில், சுமார் 25 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விட்டனர். எனவே, ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்து வந்த பணிகளைச் செய்வதற்கு தற்போது ஆட்கள் இல்லை. நிரந்தரத் தொழிலாளர்களே அந்த வேலையைச் செய்ய வேண்டிய நிலை உள்ளது. கம்பங்கள் நடும் வேலையை ஒப்பந்த ஊழியர்களும் கட்டுமானப்பிரிவு ஊழியர்களும் செய்தனர். இப்போது அந்த வேலையை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியும் நான்கு பேர்தான் இருக்கிறோம். நான்கு பேரை வைத்து எப்படி கம்பம் நடுவது என்று அதிகாரிகளிடம் கேட்டால், ‘அதெல்லாம் தெரியாது. வெளியே யாரையாவது கூப்பிட்டு வேலையை முடியுங்கள்’ என்று அதிகாரிகள் அதட்டுகின்றனர். அது மட்டுமில்லாமல், விரிவாக்கப் பணிகளை நாங்கள் செய்ய வேண்டியிருப்பதால், பணம் கட்டாத இணைப்பைத் துண்டிக்கும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மின் துண்டிப்பு நடவடிக்கை மூலமாகத்தான் மின்வாரியத்திற்கு வருமானம் கிடைக்கிறது. எனவே கம்பம் நடுவது போன்ற பணிகளைக் கவனிப்பதற்கு புதிதாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்" என்கிறார் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மின் ஊழியர் ஒருவர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை சுமார் 55 ஆயிரம் பணியிடங்கள் காலியாகக் கிடப்பதாகத் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். அவற்றை முழுமையாக நிரப்பினால் பணிச்சுமையில் இருந்து ஓரளவு விடுதலை கிடைக்குமே என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. ஷாக் அடிக்கும் கருவிகள்: ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக, தாத்தா காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் பொருத்தப்பட்ட இரும்பு மின் மீட்டர்கள் தற்போதும் நன்றாகச் செயல்படுகின்றன. அந்த மீட்டர்களில் ஏதாவது ஒரு பாகம் பழுதடைந்துவிட்டால், அதைப் பழுது நீக்கி மீண்டும் பொருத்துவார்கள் அல்லது பழுதான பாகத்தை நீக்கிவிட்டு புதிய பாகத்தைப் பொருத்துவார்கள். பிரச்சினையில்லாமல் மீட்டர் செயல்படும். ஆனால், சமீப ஆண்டுகளில் இரும்பு மீட்டர்களையே காணமுடியவில்லை. டிஜிட்டல் மீட்டர் என்ற பிளாஸ்டிக் மீட்டர்களே தற்போது பொருத்தப்படுகின்றன. இந்த மீட்டர்கள் ஓராண்டுக்குள்ளாகவே பழுதடைந்து விடுகின்றன. ஒருமுறை பழுதடைந்துவிட்டால் பழுது நீக்குவது சிரமம். எனவே, புதிதாக வேறொரு மீட்டர் வாங்க வேண்டியிருக்கிறது. ரீடிங் எண்களை இந்த மீட்டர் சரியாகக் காட்டுவது இல்லை என்ற புகார் பரவலாக உள்ளது. கணக்கு எடுப்பவர் அதிகமான யூனிட்டை குறிப்பிடுவதாக எழும் சர்ச்சையால் நுகர்வோருக்கும் மின் ஊழியர்களுக்கும் இடையே பல இடங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மீட்டர் மட்டுமல்ல, மின்வாரியத்தில் பயன்படுத்தப்படும் வயர் உட்பட அனைத்து உபகரணங்களும் தரமற்றவையாக உள்ளன என்கிற புகார்கள் பரவலாக உள்ளன. எங்கள் மாவட்டத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த 33 கிலோவாட் துணை மின்நிலையம் ஒன்று, 110 கிலோவாட் துணை மின்நிலையமாக மாற்றப்பட்டது. அப்போது, பழைய துணை மின்நிலையத்தில் இருந்து பல உபகரணங்கள் கழற்றி எடுக்கப்பட்டபோது, அவை இன்னும் பல ஆண்டுகள் செயல்படக்கூடிய தகுதியுடன் தரமானதாக இருந்தன. உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. அவை 110 கிலோவாட் துணை மின்நிலையத்தில் பொருத்தப்பட்டன. தற்போது நன்கு செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது வாங்கப்படுகிற எல்லா உபகரணங்களும் தரமற்றவையாக உள்ளன" என்று கவலையுடன் கூறுகிறார்,
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உதவி மின் பொறியாளர் ஒருவர். கம்பிகளும் வயர்களும் தரம் குறைந்தவையாக உள்ளன. உயர் அழுத்த மின்கம்பங்களில் பயன்படுத்தப்படும் இன்சுலேட்டர் தரமில்லாதவையாக இருப்பதால், விரைவிலேயே துளைகள் ஏற்பட்டு மின் கசிவு ஏற்படுகிறது. எந்த இடத்தில் கோளாறு என்பதைக் கண்டறிவது பெரும் சிரமம். கோளாறைக் கண்டுபிடித்து சரிசெய்வதற்கு நான்கு மணிநேரம் கூட ஆகிவிடும். அதுவரை அந்தத் தடத்தில் மின்சாரம் தடைபடும். குறைந்த விலையில் உபகரணங்கள் வாங்கப்படுவதால் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. அடிக்கடி பிரேக்கர்கள் வெடிக்கின்றன. பீங்கான் வெடித்துச் சிதறி தொழிலாளர்களின் உடல்களை சல்லடையாகத் துளைக்கின்றன. தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களும் தரமற்றவையாக வாங்கப்படுகின்றன. மின் கம்பத்தில் ஏறி வேலை செய்யும்போது பெல்ட் ரோப் எனப்படும் கயிற்றைப் பயன்படுத்துவோம். சமீபகாலமாக எங்களுக்கு வழங்கப்படும் வெள்ளை நூல் கயிறு அறுந்து விடுகிறது. இதனால் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இப்போது, அந்தக் கயிற்றை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால், எங்கள் அலுவலகத்தில் பெல்ட் ரோப் குவிந்து கிடக்கிறது" என்கிறார், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மின் கம்பியாளர் ஒருவர். - நன்றி புதிய தலைமுறை வார இதழ்
Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Subscribe to:
Post Comments (Atom)
Acceptance of Consumer Meter
Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...

No comments:
Post a Comment