Join us on Facebook

Please wait.. 10 Seconds Cancel
இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்

Nov 8, 2015

வீணாகலாமா மின்சாரம்? (தமிழ் தி இந்து கட்டுரை)

Return to frontpage
பெரும்பாலான தருணங்களில் வீட்டில் மின்விசிறிகள் சுழன்றுகொண்டிருக்கும், விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும். இவை போன்ற மின்சாதனங்களை அவசியமற்ற தருணங்களில் நிறுத்திவிடலாம். ஆனால் அப்படிச் செய்கிறோமா என்பது சந்தேகமே. நமது பணம், நமது உரிமை என்னும் மெத்தனத்துடன் செயல்படுகிறோம். மின்னாற்றலை வீணாக்குவது நல்லதல்ல என்பதால் இதில் நாம் கவனத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் நாட்டின் மின் சேமிப்புக்கு நாமும் உதவலாம். சிறு அளவில் மேற்கொள்ளும் சேமிப்பும் ஒரு நாட்டுக்குப் பெருமளவில் உதவவேசெய்யும்.

நாம் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளும் மின் சேமிப்பின் மூலம் நாட்டின் எரிபொருள் சேமிப்பில் 15 சதவீதத்தைச் சமாளித்துவிடலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். குளிர்சாதன வசதி, குளிர்பதனப் பெட்டி, சலவை இயந்திரம், குழல் விளக்கு, மின் விசிறி, காற்றை வெளியேற்றும் மின் விசிறி, மின்சார அடுப்பு, நீரேற்ற உதவும் பம்பு போன்ற நாம் கையாளும் மின் சாதனங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால் போதும் நாட்டின் சேமிப்புக்கு நாமும் கைகொடுக்கலாம்.
மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் மற்றொரு உபயோகமும் உண்டு, காற்று மாசைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவலாம். வீட்டில் மின்சாரத்தைச் சேமித்தால் எப்படிச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என யோசிக்கிறீர்களா? இரண்டு சாதாரணமான கார்கள் வெளியேற்றுவதைவிட அதிகமாக ஒரு வீட்டின் மின்சாரப் பயன்பாட்டால் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுகிறதாம். ஆகவே அநாவசிய மின் உபயோகத்தால் சுற்றுச்சூழலை நாம் மாசுபடுத்துகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வளவு மின்சாரம்?
பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாடு எவ்வளவு என்பதை ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதன்படி, 12 சதவீதம் குளிர்பதனப் பெட்டிக்கும், 20 சதவீதம் குளிர்சாதன வசதிக்கும், 8 சதவீதம் விளக்குகளுக்கும், 32 சதவீதம் வெந்நீர்க் கொதிகலத்துக்கும், 28 சதவீதம் பிற சாதனங்களுக்கும் செலவாகிறது. அவசியத்துக்குத் தானே நாம் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம் என நாம் நினைக்கலாம். ஆனால் நமது அஜாக்கிரதையால்கூட சில சமயங்களில் மின்சாரம் வீணாகிறது, குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள அறையில் இடைவெளியற்ற முறையான கதவு இருக்க வேண்டும். சிறிய இடைவெளி இருந்தால்கூட மின்சாரம் வீணாகக்கூடும் எனவே இதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டின் மின்சாரப் பயன்பாட்டில் 20 சதவீதம் குளிர்சாதன வசதிக்கெனத் தேவைப்படுகிறது. ஆகவே இதன் மின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் அவசியம். பசுமையான வெப்பநிலையைத் தரும் வகையில் குளிர்சாதன வசதி இயந்திரம் இயங்க வழிசெய்ய வேண்டும். அறையின் வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ அந்த அறையில் வைக்கக் கூடாது.
குளிர்சாதன வசதி இயந்திரத்தின் அவுட்டோர் யூனிட்டை நிழலான இடத்தில் பொருத்தினால் அதன் மூலம் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலைச் சேமிக்க அது உதவும் என்று சொல்கிறார்கள். இதை நாம் பின்பற்றலாம். மேலும் பசுமைக் கூரை அமைப்பதாலும், வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதாலும், வீட்டின் வெளிச் சுவர்களில் மென்மையான வண்ணங்கள் பூசுவதன் மூலமும்கூட மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.
விளக்குகள் பயன்பாடு 8 சதவீத மின்சாரத்தை எடுத்துக்கொள்வதால் அநாவசியமாக மின் விளக்குகளை ஒளிர விடுவதைத் தவிர்ப்பது அவசியம். குண்டு பல்புகள், குழல் விளக்குகள் போன்றவற்றைத் தவிர்த்து சிஎஃப்எல் விளக்குகளைப் பயன்படுத்தினால் மின்சாரத்தைச் சிறிது சேமிக்கலாம்.
குளிர்பதனப் பெட்டியின் பயன்பாட்டுக்கு 12 சதவீத மின் ஆற்றல் தேவைப்படுகிறது. இதில் சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் அதுவும் மின்சாரத்தைச் சேமிக்க உதவும். அளவுக்கதிகமான குளிர் நிலவும்படி ஃப்ரீஸர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமானவரையில் குளிர்பதனப் பெட்டியை மூடித் திறக்கும் எண்ணிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை பெட்டியை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.
குளிர்பதனப் பெட்டிக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் மின்சாரத்தைச் சேமிக்க முடியும். உணவுப் பதார்த்தங்களுக்கு 36-40 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஃப்ரீஸருக்கு 0-5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் உகந்தவை எனச் சொல்கிறார்கள். குளிர்பதனப் பெட்டியின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். இல்லையெனில் மின்சாரம் வீணாகும்.
சலவை இயந்திரத்தைப் பொறுத்தவரை எப்போதும் அதை முழுமையாகப் பயன்படுத்துவது நல்லது. அதாவது இயந்திரத்தில் எந்த அளவுக்கு அதிகமாகத் துணிகள் இடம்பெற வேண்டுமோ அந்த அளவுக்குத் துணிகளைப் போட்டுத் துவைப்பது சிக்கன மின்சாரத்தின் பயன்பாட்டுக்கு உதவும். டிடர்ஜெண்ட் பவுடரும் தேவையான அளவுக்குப் போட வேண்டும். மிக அழுக்கான, கறைகள் அதிகமாக உள்ள துணிகளுக்கு மட்டும் வெந்நீரைப் பயன்படுத்துவது நல்லது.
மின்சார அடுப்பில், தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். தேவையான வெப்பநிலையைத் தேர்ந்தெடுத்து முறையாகப் பயன்படுத்துவது அவசியம்.
இப்படி ஒவ்வொரு வகையிலும் திட்டமிட்டுத் தேவையான அளவுக்கு மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்துவது நமது பணத்தை மிச்சப்படுத்துவதுடன் நாட்டுக்கும் நன்மை பயக்கும். ஆகவே மின் சாதனங்களை முறையாகக் கையாண்டு மின் ஆற்றலைச் சரியான வகையில் சிக்கனமாகச் செலவழித்து மின் ஆற்றல் சேமிப்புக்கு நம்மால் ஆன அளவில் உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் செயல்படுவோம்.
Post a Comment