ரூ.30,791 கோடியில் 4 புதிய மின் திட்டங்கள்: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா
தமிழகத்தின் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக ரூ.30,791 கோடி செலவில் ராமநாதபுரம், வடசென்னை, அரியலூர், கோவை ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படவுள்ள 4 புதிய மின் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, "மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ராமநாதபுரத்தில் மாபெரும் அனல் மின் திட்டம்:

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் 4,000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாபெரும் அனல் மின் திட்டம் 24,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்திற்குத் தேவையான சுமார் 3000 ஏக்கர் நிலம் கொண்ட நல்லாம்பட்டி வருவாய் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தேவையான திட்ட அனுமதிகளை பெற்ற பின் இம்மின் திட்டம் தொடங்கப்படும்.
வடசென்னையில் தொகுப்பு துணை மின் நிலையம்:
மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 400 கிலோ வோல்ட் மற்றும் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வட சென்னையில் 765/400 கிலோ வோல்ட் 3*1500 எம்.வி.ஏ. திறன் கொண்ட தொகுப்பு துணை மின் நிலையம் 2,335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
இந்த தொகுப்பு துணை மின் நிலையம் அரியலூர் 765/400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் 400 கிலோ வோல்ட் புளியந்தோப்பு, துணை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு வட சென்னை மற்றும் எண்ணூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்ற வழிவகை செய்யும்.
அரியலூரில் துணை மின் நிலையம்:
மேலும், அரியலூரில் 765/400 கிலோ வோல்ட் 2*1500 எம்.வி.ஏ., திறன் கொண்ட துணை மின் நிலையம் 2121 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துணை மின் நிலையம் 765/400 கிலோ வோல்ட் திருவலம் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்பட்டு வட சென்னை மற்றும் எண்ணூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படவிருக்கும் மின்சாரத்தை கடத்துவதற்கு துணை புரியும்.
கோவையில் துணை மின் நிலையம்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 765/400 கிலோ வோல்ட் 2*1500 எம்.வி.ஏ. திறன் கொண்ட துணை மின் நிலையம் 2,335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துணை மின் நிலையம் அரியலூர் 765/400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் 400 கிலோவோல்ட் எடையார் பாளையம், ராசிப்பாளையம் துணை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, கோவை, சேலம் மற்றும் மேட்டூர் பகுதிகளின் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும்.
மேற்காணும் அறிவிப்புகள் மூலம் தமிழகம் மின்சாரத்தில் மின்மிகை மாநிலம் என்ற நிலையைப் பெறுவதோடு, தொழில் வளர்ச்சி மேன்மையடைந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழி வகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click