மின்சாரத்தை சேமிக்க வழிகாட்டும் மாணவர்கள் ( 'விஷன்-10' )


logo
இணையதள மென்பொருளுடன் மாணவர்கள்

''மின் சேமிப்பு, எளிமையானது. இன்றைய காலகட்டத்திற்கு தேவையானது. மின்சார உற்பத்தி குறைந்து, மின் கட்டணங்கள் உயர்ந்து வருகின்றன. மின் நுகர்வை நம்மால் தவிர்க்க முடியாது என்றாலும் அதனை சிக்கனமாக பயன்படுத்தலாம். மின்சாரத்தை புதிதாக உற்பத்தி செய்வதை காட்டிலும், செலவழிக்கும் மின்சாரத்தை சேமிப்பது அவசியமானது. நாம் சேமிக்கும் மின்சாரம் வருங்கால சந்ததியினருக்கு பயன்படுவது மட்டுமில்லாது நமது செலவையும் குறைக்கும்'' என்கிறார் ரமேஷ்.

இவர் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கூடுதல் பல்கலைக்கழக தலைவராகவும், மின்பொறியியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 'மின்சார சேமிப்பு' என்ற அடிப்படை தேவையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் 'விஷன்-10' என்ற திட்டத்தை மாணவர்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார். 'விஷன்-10' என்பது 10 வருடத்திற்குள்ளாக 10 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்கும் முயற்சி. இதற்காக மின்சக்தியை சேமிக்கும் வழிமுறைகளை மாணவர்களுடன் இணைந்து விளக்கி வருகிறார். 

இதனை முதற்கட்டமாக செயல்படுத்த கல்லூரி அமைந்துள்ள மதுரவாயல் பகுதியில் இருக்கும் வீடுகளை பயிற்சி களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 100 வீடுகள், 10 தொழிற்சாலைகள், 12 அடுக்குமாடி குடியிருப்புகளை மின்சார சேமிப்பில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். பேராசிரியர் ரமேஷ் மற்றும் அவரது மாணவர்கள் வழங்கும் சேமிப்பு ஆலோசனைகள் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக இருப்பது இந்த திட்டத்தின் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.  

மாணவர்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் 'விஷன்-10' திட்டத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் மின்பொறியியல் துறையின் இறுதி ஆண்டு மாணவர்கள் அங்கம் வகிக்கின்றனர். மின்சாரத்தை சேமிக்கும் காரணிகளையும், வீடுகளில் வீணடிக்கப்படும் மின்சாரத்தை கணக்கிடும் பணிகளையும் மாணவர்கள் தங்களுக்குள்ளாக பகிர்ந்து கொள்கின்றனர். துறை சார்பான செயல்முறை திட்டம் என்பதால் மாணவிகளும் இதில் பங்கெடுத்துக்கொள்கின்றனர். 

 பொதுவாக வீடுகளில் எப்படி மின்சாரம் வீணடிக்கப்படுகிறது என்ற கேள்வியை மாணவர் கிஷோர் குமாரிடம் கேட்க, அவர் களப்பணியில் சந்தித்த தனது அனுபவங்களை பதிலாக கூறினார்.

''மின்சாரத்தை சரியாக பயன்படுத்தினாலே மின்கட்டணத்தை வெகுவாக குறைத்துவிடலாம். முதலில் நாங்கள் வீடுகளில் எந்த உபகரணம் அதிக மின்சக்தியை எடுத்து கொள்கிறது, அதை எப்படி குறைக்கலாம் என்பது பற்றி அந்தந்த வீடுகளில் ஆராய்ந்து பார்ப்போம். அதற்கு குறைந்தது 4 மணி நேரம் எடுத்து கொள்ளும். ஏனெனில் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் மின்சாரம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் சோதித்து மின்சாரம் பகிர்ந்தளிக்கும் கணக்கீடுகளை தயாரிப்போம். இதில் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் சாதனங்களில் தான் அதிகபடியான மின்சாரம் வீணாக்கப்படுகிறது. சுவிட்சை அணைக்காமல் ரிமோட்டில் ஆப் செய்ய மக்கள் பழகி விட்டனர். இதனால் மின்சக்தி மின்சாதனங்களுக்குள்ளாக பாய்ந்துகொண்டே இருக்கும்.

 இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் வழங்கும் ஆலோசனைகள் வீட்டின் அமைப்பிற்கும், வசதிக்கும் ஏற்ப மாறுபடுகிறது. இவர்கள் தங்களால் முடிந்தவரை செலவில்லாமல் மின்சக்தியை சேமிக்கும் வழிமுறைகளை வழங்குகின்றனர். இவை இயலாத பட்சத்தில் வீட்டு உரிமையாளர்களை மின்சேமிப்பை உறுதிப்படுத்தும் நவீன வீட்டு உபயோக கருவிகள் வாங்கி பயன்படுத்த அறி வுறுத்துகின்றனர். இவர்களின் ஆலோசனைப்படி சில வீடுகளில் 'ஸ்டார் ரேட்டிங்' அடிப்படையிலான நவீன பிரிட்ஜ், டி.வி. போன்றவைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்” என்றார்.

நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் எப்படி எளிமையாக மின்சாரத்தை சேமிக்கலாம் என்ற கேள்வியை மாணவர் கீர்த்தி ஜெயினிடம் முன்வைத்தோம். அதற்கு அவர்... 

''மின்சாரத்தை சேமிக்க புதிதாக எதையும் வாங்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் உபகரணங்களை பராமரித்து, சில மாற்றங்களை செயல்படுத்தினாலே போதுமானது. பொதுவாக வீடுகளில் ஒருசில விளக்குகள் மட்டுமே எந்நேரமும் எரியவிடப்படும். மற்ற விளக்குகள் தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்தப்படும். இவ்வாறு அதிகமாக எரிய விடப்படும் 2 அல்லது 3 விளக்குகளை மட்டும் எல்.ஈ.டி.யாக மாற்றி கொள்ளலாம். ஏனெனில் 60 வாட் குண்டு பல்பு தரும் வெளிச்சத்தை 15 வாட் எல்.ஈ.டி பல்புகள் தருவதால் மின்செலவை வெகுவாக குறைக்கமுடியும். 

மேலும் கிரைண்டர், சீலிங் பேன், ஏ.சி. போன்றவற்றில் தூசு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தூசு படிந்திருந்தால் அவை இருமடங்கான மின்சக்தியை இயக்கத்திற்கு எடுத்துக்கொள்ளும். இயன்றவரை 'ஸ்டார் ரேட்டிங்' வழங்கப்பட்டுள்ள மின்சாதனங்களை வாங்கி பயன்படுத்தலாம். 

இவை குறைந்தளவிலான மின்சக்தியில் இயங்கக்கூடியவை. பிரிட்ஜில் ஸ்டீல் பாத்திரங்களை தவிர்த்துவிட்டு தட்பவெட்பம் ஊடுருவக்கூடிய டப்பர்வேர் பாத்திரங்களை உபயோகப்படுத்தலாம். ஏனெனில் ஸ்டீல் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை குளிர்ச்சியாக்க அதிக நேரம் தேவைப்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி ஏ.சி., பிரிட்ஜ் போன்றவற்றை பயன்படுத்துங்கள். வாரத்திற்கு ஒரு முறை பிரிட்ஜ் பிரீசரை, 'டிபிராஸ்ட்' செய்ய மறக்காதீர்கள். பிரிட்ஜை சுவற்றுடன் ஒட்டி வைத்தால் பிரிட்ஜின் செயல்பாடு குறையும். அதை ஈடுகட்ட இருமடங்கான மின்சக்தியை எடுத்துக்கொள்ளும்'' என விளக்கமாக பதில் வழங்கினார். 

கீர்த்தி ஜெயின் மற்றும் கிஷோர் குமார் ஆகிய இருவருமே விஷன்-10 திட்டத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்களாக செயல்படுகின்றனர். இவர்களின் ஆலோசனைப்படி செயல்பட்ட வீடுகளில் மின்சார செலவு கணிசமாக குறைந்துள்ளது. ரூ.1000 வரை சேமிக்கும் யுக்திகளை வழங்கியுள்ளனர். மேலும் கீர்த்தி ஜெயின் மின்சார அளவீடு தொடர்பான நவீன மீட்டரையும் உருவாக்கி வருகிறார். 

இவர்கள் சோலார் பேனல்கள் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்வது குறித்த ஆலோசனைகளும் வழங்குகிறார்கள். சோலார் பேனல்கள் முறை சாதாரண குடும்பங்களுக்கு சாத்தியமா?, அவற்றை எப்படி பொருத்துவது என பேராசிரியர் ராஜேஷிடம் கேட்டோம். 

''நடுத்தர குடும்பங்கள் சோலார் பேனல்களை பயன்படுத்தலாம். இதற்கான செலவு 10 ஆயிரத்திற்கும் குறைவாக தான் வரும். சோலார் பேனல்களை பயன்படுத்தி மின்சாரம் சேமிக்க தமிழக அரசும் மானியம் வழங்குகிறது. வீட்டின் அத்தியாவசிய தேவைகளை மட்டும் சோலார் பேனல்களின் வழியே மின்சக்தியாக பெறுவது நல்லது. ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஏ.சி. போன்ற பெரிய மின்சாதனங்களை இயக்க அதிகப்படியாக சோலார் பேனல்கள் தேவைப் படும்.

 அவற்றை தவிர்த்து சிறுசிறு சாதனங்களை சோலார் பேனல் மின்சாரத்தில் இயக்கலாம். மேலும் வீட்டில் இருக்கும் இன்வெர்டர்களை பயன்படுத்தியே சோலார் பேனல்களில் உருவாகும் மின்சக்தியை சேமித்துக்கொள்ளலாம். 

மாணவர்கள் காட்வின், கிஷோர் குமார், கீர்த்தி ஜெயின், ஆதித்யா மற்றும் அவனீஷ் குமாருடன், பேராசிரியர் ரமேஷ்.

இன்வெர்டர்கள் வைத்திருக்கும் வீடுகளில் இதன் செலவு வெகுவாக குறையும். மின்சேமிப்பு ஆலோசனைகளுடன் சோலார் பேனல்கள் பொருத்தும் வழிமுறைகளையும் வழங்கி வருகிறோம்'' என்று கூறினார். 

 மின்சேமிப்பை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படும் 'விஷன்-10' குழுவினர் இதற்காக இணையதள வடிவிலான மென்பொருளையும் உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் மின்சேமிப்பு குறித்த ஆலோசனைகளை உலகின் எந்த பகுதியில் இருந்தும் இலவசமாக பெறலாம். இணைய தளத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் வழங்கினால் போதுமானது. மென்பொருளே வீட்டில் மின்சாரத்தை வீணாக்கும் காரணிகளை பட்டியலிட்டு விடும். மேலும் அவற்றை சீர்செய்யும் ஆலோசனைகளும் வழங்கப்படும். இதனை பேராசிரியர் ராஜேஷின் பரிந்துரையின்படி ஐ.டி.துறை மாணவர்கள் காட்வின் மற்றும் ஆதித்யா ஆகியோர் வடிவமைத்துள்ளனர். 

இதுபற்றி அவர்கள் கூறியபோது...

''மின்சக்தி குறித்த ஆலோசனைகளை 100 வீடுகளுக்கு வழங்கவே ஒரு ஆண்டு பிடித்துக்கொண்டது. இதனை தமிழகம் முழுவதுமாக செயல்படுத்த எத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளுமோ தெரியவில்லை. இதனை எளிமையாகவும், விரைவாகவும் செயல்படுத்தவே இணையதள வடிவிலான மென்பொருளை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் உதவியின்றி நேரடியாக இணையதளத்தின் வழியே வீட்டின் மின்சேமிப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். தனிமையை விரும்பும் குடும்பங்களுக்கு இணையதள மென்பொருள் பயனுள்ளதாக அமையும்'' என்றார்கள்.

சுவிட்ச் போர்டில் இருக்கும் 'நீயூட்டர் பிளக்கு'களில் மின்சாரம் அதிகமாக வீணக்கப்படுகிறது. சில வீடுகளில் வயரிங் வேலைகளின் போது அதிலும் மின்சார இணைப்பை வழங்கிவிடுகின்றனர். இதனால் நமக்கு தெரியாமலே மின்சாரம் வீணாகிறது. இதை பல வீடுகளில் கண்டறிந்து துண்டித்துள்ளோம். பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் அதற்கேற்ப அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டியதுஇருக்கிறது. போனை சார்ஜர்களில் போட்டுவிட்டு துண்டிக்கும்போது அதன் சுவிட்சுகளை அணைக்க மறந்து விடுகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட் போன் சார்ஜர், லேப்டாப் சார்ஜர், அணைக்கப்படாமல் இருக்கும் கணினி போன்றவைகளும் அதிகமான மின்சக்தியை வீணாக்குகின்றன. இதில் மின்சக்தியுடன் சார்ஜர் களும் பழுதடைய வாய்ப்பு உள்ளது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click