லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை வீடியோக்கள் மற்றும் படங்கள் போன்ற ஆதாரங்களுடன் புகார் செய்ய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில், வாட்ஸ் அப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்திலும் இந்த முறையை கொண்டு வர, ஆலோசனை நடக்கிறது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி) சார்பில், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, புத்தாண்டு முதல் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, என்.எல்.சி., நிறுவன லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை கண்காணிப்பு அதிகாரி ஷிவ்ராஜ் சிங், தனது மொபைல் போன் எண் உள்ளிட்ட இரண்டு மொபைல் போன் எண்களை அறிவித்துள்ளார். 94861 50325, 94861 50326 ஆகிய அந்த இரண்டு எண்களிலும் ’வாட்ஸ் அப்’ சமூக வலைத்தள தகவல் சேவை இணைக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணில் என்.எல்.சி., தொடர்பான பிரச்சினைகளுக்காக சட்டத்துக்கு புறம்பாக பணமோ, பரிசோ, அன்பளிப்போ கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதுபற்றி புகைப்படம், வீடியோ அல்லது சான்றுகள் போன்ற ஆவணங்களுடன், பணியாளர்கள், அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பவரின் பெயர், மொபைல்போன் எண் மற்றும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை ரகசிய விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தலைமை லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் ஷிவ்ராஜ் சிங் அறிவித்துள்ளார். இதற்கு, பல்வேறு என்.எல்.சி., தொழிற்சங்கங்கள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்த முறையை, தமிழக மின் வாரியத்திலும் அமல்படுத்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான தமிழக மின் வாரிய மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறும் போது,’இந்த திட்டம் வரவேற்புக்குரியது. மின் வாரியத்தில் வாட்ஸ் அப் புகார் முறையை அமல்படுத்துமாறு, சிஐடியூ சார்பில் மனு அளிப்போம்,’என்றார்.
பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலாளர் சந்திரன், ‘‘வாட்ஸ் அப் புகார் முறையை அமல்படுத்த, மின் வாரியத் தலைவரை சந்தித்து மனு அளிப்பதுடன், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மற்ற சங்கங்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு நடவடிக்கையும் மேற்கொள்வோம்’’ என்றார்.
இதுதொடர்பாக தமிழக மின் வாரிய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபி ஆர்.சேகர் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘தமிழக மின் வாரியத்தில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு தனியாக தொலைபேசி எண்கள், மொபைல் போன் எண்கள் மற்றும் புகார் பெட்டி வசதிகள் உள்ளன.
இவற்றின் மூலம் மாவட்ட வாரியாக ஒவ்வொரு பகுதி அலுவலகங்கள் மூலமும், புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்
போதைய சூழலில் நவீன வாட்ஸ் அப் புகார் முறையையும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிப்போம்’’ என்றார்.

THANKS TO 

Return to frontpage