மின் நுகர்வோருக்கு நவீன மின் மீட்டர்:மேலும் 11 நகரங்களில் ஆய்வு செய்ய முடிவு

முறைகேடுகளை தடுக்க, மின் நுகர்வோருக்கு, நவீன மின் மீட்டர் வழங்கப்பட உள்ளது. இதற்காக, மூன்று நகரங்களில், நவீன மின் மீட்டர் பயன்பாடு ஆய்வு செய்யப்பட்ட நிலையில், மேலும், 11 நகரங்களில், ஆய்வு பணிகளை விரிவுபடுத்த, தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.தரமான மின்சாரம்மத்திய அரசு, 'திருத்தி அமைக்கப்பட்ட, துரிதப்படுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு' திட்டத்தை, 2008ல் அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின் நோக்கம், மின் இழப்பை குறைத்து, நுகர்வோருக்கு, தரமான மின்சாரத்தை சீரான முறையில் வினியோகிப்பதாகும். இத்திட்டம், இரு பிரிவுகளை உள்ளடக்கியது. முதலாவதாக, தகவல் தொழில்நுட்ப கருவிகள் மூலம், மின் இழப்பை கண்டறிதல்; இரண்டாவதாக, புதிய டிரான்ஸ்பார்மர், மின் வழித்தடம், துணைமின் நிலையம் அமைத்து, மின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்துவது.


தமிழகத்தில், மேற்படி திட்டம், 2009 ஜூலையில் துவங்கியது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட, 110 நகரங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் பிரிவிற்கு, 417 கோடி ரூபாயும், இரண்டாவது பிரிவிற்கு, 3,280 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.முறைகேடுகள்:மின் நுகர்வோர், மின் மீட்டரில், பல முறைகேடுகளைச் செய்வதால், மின்வாரியத்திற்கு, அதிகளவில் இழப்பு ஏற்படுகிறது.

இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ், சாதாரண மீட்டருக்கு பதில்,'ஆட்டோமேடிக் மீட்டர் ரீடிங்' எனப்படும், நவீன மீட்டரை இலவசமாக வழங்க, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, கோபி, சத்தியமங்கலம், பவானி ஆகிய மூன்று நகரங்களில், நவீன மின் மீட்டர் பொருத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம், மின் பயன்பாடு குறித்த விவரங்கள் துல்லியமாக கிடைத்தன.இதையடுத்து, நாமக்கல், ராசிபுரம், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருத்தணி, ஆற்காடு, மேல்விசாரம், கரூர், ஆம்பூர், செங்கல்பட்டு, மறைமலைநகர் ஆகிய, 11 நகரங்களில், நவீன மின் மீட்டர் ஆய்வு பணிகளை விரிவுபடுத்த மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'பல கட்ட ஆய்வுக்கு பின்னரே, மின் நுகர்வோருக்கு, நவீன மீட்டர் வழங்கப்படும்' என்றார்.

முறைகேடு குறையும்:நவீன மீட்டரில், ஒரு, 'சிப்' பொருத்தப்படும். மின் கணக்கீட்டாளருக்கு, 'ரிமோட்' கருவி வழங்கப்படும். 60 மீட்டர் சுற்றளவு துாரம் வரை, இந்த மின் மீட்டரிலிருந்து, மின் பயன்பாட்டுக் கணக்கு விவரங்களை, 'ரிமோட்' கருவி மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த தகவல், சென்னை, மின் வாரிய அலுவலகத்தில் உள்ள, கணினி மையத்தில் உடனடியாக பதிவாகும். இதனால், முறைகேடுகள் குறையும் என, தெரிகிறது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click