மின் உற்பத்தி, பகிர்மானம், வழங்குதல் துறைகளில் வருகிறது மாற்றம் (தினமலர்)

புதுடில்லி: மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சேவையை மாற்றிக் கொள்வது போல், மின் நுகர்வோரும், விரைவில், தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை வாங்கிக் கொள்ள முடியும். சிறந்த சேவையை எந்த நிறுவனம் வழங்குமோ அந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெற்று பயன்படுத்திக் கொள்ள வகை செய்யும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.



வெளிநாடுகளில்:


அமெரிக்கா, நியூசிலாந்து, பிரிட்டன் போன்ற பல நாடுகளில், மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் வழங்குதல் துறை, தனியார் வசம் உள்ளது. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம், பகிர்மானத்தை மற்றொரு நிறுவனத்திடம் வழங்குகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து, பல சிறு நிறுவனங்கள் அல்லது உள்ளூர் நிறுவனங்கள், மின்சாரத்தை பெற்று, வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வழங்குகின்றன. இத்தகைய முறையால், போட்டி ஏற்பட்டு, தரமான மின் வினியோகத்துடன் கூடிய மின் சேவை, நுகர்வோர்களுக்கு கிடைக்கிறது. இந்த முறையில், மின் நுகர்வோர் விரும்பினால், தங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை, இஷ்டம் போல் மாற்றிக் கொள்ள முடியும். இதனால், வாடிக்கையாளர்கள் தங்களை விட்டு, பிற நிறுவனங்களுக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக, தரமான விதத்தில் மின் சேவை வழங்க, நிறுவனங்கள் முன்வரும். இந்த புரட்சிகரமான மின் சப்ளை முறை, விரைவில் நம் நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இளைஞரான, ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான, மத்திய மின்துறை, இந்தத் திட்டத்தை செயல்படுத்த துடிப்புடன் செயல்படுகிறது. முதற்கட்டமாக, அனைத்து மாநில மின்துறை உயரதிகாரிகளை அழைத்து, இந்த முறையை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன, அதனால், நுகர்வோர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எந்த அளவுக்கு, அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.


மின் தட்டுப்பாடு:


அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, மாநில அதிகாரிகள் பெரும்பாலானோர், 'போதிய மின் உற்பத்தி இல்லாமல், மின் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், இத்தகைய திட்டம் எவ்வாறு செயல்படுத்த முடியும்?' என, கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், 'மின் பற்றாக்குறை இப்போதைய, குறுகிய கால பிரச்னை தான்; அது, விரைவில் தீர்க்கப்பட்டு விடும். மின் உற்பத்தி மிகையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதனால், இப்போதைக்கு, மிகை உற்பத்தி மாநிலங்களின் முக்கிய நகரங்களில், இந்தத் திட்டத்தை செயல்படுத்திப் பார்ப்போம். அதில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்' என தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் எவ்வாறு இருக்கும் என, மத்திய அரசு தெரிவித்துள்ள, குறிப்புகளின் அடிப்படையில், கீழ்கண்ட தகவல்கள் தெரிய வருகின்றன.

* எந்த நிறுவனத்திடம் இருந்து மின் சேவை பெறுவது என்ற தெரிவு, நுகர்வோர் வசம் வரும். ஒரே நிறுவனத்தையே காலம் காலமாக சார்ந்திருக்கத் தேவையில்லை. விரும்பினால், சேவை வழங்கும் நிறுவனத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளலாம்.

* எவ்வளவு மின்சாரம் வேண்டுமானாலும், பயன்படுத்திக் கொள்ளலாம்; கட்டுப்பாடுகள் இருக்காது. அதிக பயன்பாட்டிற்கு, குறை வான கட்டணம் கூட கிடைக்கலாம்.

* மின் உற்பத்தி, மின் பகிர்மானம், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்குதல் போன்ற பிரிவுகளில், ஏராளமான தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும்.

* மொபைல் போன் சேவை போல், ஒவ்வொருவரும், தனித்தனி இணைப்பு வசதிகள் ஏற்படுத்த தேவையில்லாமல், பொதுவான அமைப்பிடம் மின்சாரத்தை பெற்று, பிரித்து வழங்குவர்.

* கட்டணம், ஒரே சீராக இருக்காது; நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியால், அதில் மாற்றங்கள் இருக்கும். கட்டுப்படியான நிறுவனத்தை, நுகர்வோர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

* நிறுவனங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என்பதால், தரமான மின் சேவை, நுகர்வோருக்கு கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.


டில்லி, மும்பை:


இப்போதைய நிலையில், டில்லி மற்றும் மும்பை நகரங்களில் மட்டும் தான், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்குவது தனியார் வசம் உள்ளது. பிற நகரங்களில், இந்த சேவையை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தான் வழங்கி வருகின்றன. அவற்றில் பல பிரச்னைகளும், புகார்களும் இருப்பதால், மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய திட்டம், அதிக வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.


தமிழகத்தில் நிலைமை என்ன?


ஜி.எம்.ஆர்., நிறுவனத்துக்கு, சென்னையில், பர்னஸ் ஆயில் மூலம், 200 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் உள்ளது. நாகை மாவட்டத்தில், பிள்ளைபெருமாள் நல்லூர் நிறுவனத்திற்கு, 330 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் உள்ளது. இந்தஅளவுக்கு தான், தமிழகத்தில், தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களின் நிலைமை உள்ளது. மின்உற்பத்தி, பகிர்மானம் மற்றும் வழங்கலுக்கு, மின் வாரியத்தில் தனித்தனி பிரிவுகள் உள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய மின் நிறுவனங்கள், தனித்து, பணிகளை மேற்கொள்கின்றன. அணு, அனல், புனல் என, மூன்று வகையான மின் உற்பத்தி நிலையங்கள், தமிழகத்தில் இருக்கும் நிலையிலும், மின் பற்றாக்குறை அபரிமிதமாகவே உள்ளது. மின் மிகை மாநிலமாக மாறும் போது, மேற்கூறிய திட்டம், தமிழகத்தில் அறிமுகமாகும் போது, சிறப்பான வரவேற்பு இருக்கவே செய்யும் என, மின் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click