போக்குவரத்து ஊழியர்களுக்கு 8 வாரத்துக்குள் ஓய்வூதிய பலன்கள் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஓய்வு பெறும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, 8 வாரங்களில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சோமசுந்தரம், மகாலிங்கம், செல்வராஜ்,வீரபாண்டியன், தர்மராஜ், நாகராஜன், ஜெயச்சந்திரன், ஆரோக்கியசாமி, மாரிமுத்து, மோகன், சந்திரசேகரன், ராமலிங்கம்,, சந்திரகாசன், கோசவலு உட்பட 16 பேர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:நாங்கள் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனர், ஓட்டுநர் மற்றும் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றோம். எங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் தரவில்லை. ஓய்வூதிய பலன்களை கேட்டு பலமுறை மனு அனுப்பியும் தரவில்லை. 9 சதவீத வட்டியுடன் ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார்.போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘நிதி நெருக்கடி காரணமாக மனுதாரர்களுக்கு உடனடியாக ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்றவர்கள் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்துள்ளோம், அந்தப்பட்டியல் அடிப்படையில் ஒருவர் பின் ஒருவருக்கு பணப்பலன்களை வழங்கி வருகிறோம். 2011 ஏப்ரல் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர்களுக்கு சில மாதங்களில் வழங்கப்படும்‘ என்றார்.பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை கேட்டு ஓய்வு பெற்ற ஊழியர்கள் கோர்ட்டிற்கு வந்தது துரதிர்ஷ்டவசமானது. ஓய்வு பெற்றவர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து, அந்த பட்டியல் அடிப்படையில் ஒருவர் பின் ஒருவராக பணப்பலன்களை வழங்குவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற உடனேயே அனைத்து பணப்பலன்களை வழங்க வேண்டியது கம்பெனியின் கடமை. ஓய்வூதிய பலன்கள், தொழிலாளர்கள் மீது கருணை காட்டி வழங்கப்படுவது இல்லை. சட்டப்படியான வழங்க வேண்டிய ஒன்றாகும். அதை போக்குவரத்து கழகம் முடக்கி வைக்க முடியாது. எனவே, மனுதாரர்களுக்கு அனைத்து பணப்பலன்களையும், மனுதாரர்கள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்தில் வழங்க வேண்டும்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click