சேலம் அங்கம்மாள் காலனி வீடுகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை ஒரு வாரத்துக்குள் வழங்கிட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள வீடுகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை இன்னும் ஒரு வார காலத்துக்குள் மீண்டும் வழங்கிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சில நில ஆக்கிரமிப்பாளர்களால் சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள வீடுகள் கட்டாயப்படுத்தி அகற்றப்பட்டன. அதன் பின்னர் தொடர்ச்சியான பல போராட்டங்கள் மற்றும் தற்போதைய மாநில அரசின் உதவியுடன் அந்தக் காலனியின் மக்கள் மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். இதற்கிடையே வீட்டு உரிமையாளர்கள் கோரியபடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாகக் கூறி அங்குள்ள வீடுகளுக்கான மின் இணைப்பை மின்சார வாரியம் துண்டித்தது. இதனை எதிர்த்து அங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் ஒருபோதும் மின் இணைப்பைத் துண்டிக்குமாறு மின்சார வாரியத்தை அணுகவில்லை என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.

இந்த மனு நீதிபதி டி.ஹரி பரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மீண்டும் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்க அங்கம்மாள் காலனி மக்கள் தயாராக உள்ளனர். அவ்வாறு அவர்கள் விண்ணப்பிக்கும்போது ரேஷன் அட்டை அல்லது வங்கி கணக்குப் புத்தகம் போன்றவற்றை குடியிருப்பு முகவரிக்கான சான்றிதழாக ஏற்றுக் கொண்டு மின் இணைப்பு வழங்க மின்சார வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.அவ்வாறு புதிதாக விண்ணப்பித்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சார வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, புதிதாக மின் இணைப்பு கேட்டு அங்கம்மாள் காலனி மக்கள் விண்ணப்பம்  அளிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்ட ஒரு வார காலத்துக்குள் அந்த வீடுகளுக்கான மின் இணைப்பை மின்சார வாரியம் வழங்கிட வேண்டும் என்று கடந்த திங்கள்கிழமை (ஜூலை 15) உத்தரவிட்டார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click