அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு: 60 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்

6-வது ஊதியக் குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு பரிந்துரையை ஏற்று, அரசு ஊழியர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3000 வரை சம்பளம் உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் 60 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.

மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக்குழு கடந்த 2009-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

6-வது ஊதியக்குழு சம்பள உயர்வில், குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து அரசு செலவீனத்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் 6-வது ஊதியக்குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், நிதித்துறை கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணைச் செயலாளர் டாக்டர் உமாநாத் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்தக்குழு, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கருததுக்களை கேட்டது. இதைத்தொடர்ந்து குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் அண்மையில் சமர்ப்பித்தது.

இந்த நிலையில் அந்தக்குழுவின் பரிந்துரையை ஏற்று விவசாயம் மற்றும் மண்வளபாதுகாப்புத்துறை, வேளாண் பொறியியல்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு தணிக்கைத்துறை, பொது சுகாதாரத்துறை உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நேற்று சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

குறைந்தபட்சம் ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.3000 வரை சம்பள உயர்வு அளித்து நேற்று ஒரே நாளில் தனித்தனியே துறை வாரியாக 20 அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அரசின் இந்த உத்தரவின்மூலம் 43 பிரிவுகளைச்சேர்ந்த 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த உத்தரவைத்தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்து துறைவாரியாக பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன.

இது குறித்து, என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் கோ.சூரிமூர்த்தி கூறுகையில், ‘‘அரசு ஊழியர்களின் நீண்ட கால மனக்குறைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்த்து வைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்வுபெறும் நிலை ஏற்படும், இந்த ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு பேருதவியாக இருக்கும் இதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிததுக் கொள்கிறேன்’’ என்றார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click