ஊழியர்கள் வேலைநிறுத்தம்: என்.எல்.சி.யில் 4-ந் தேதி முதல் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கும்


நெய்வேலி, ஜூன் 26- 


என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதை அடுத்து என்.எல்.சி. ஊழியர்கள் 3-ந் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குகிறார்கள். 



என்.எல்.சி.யில் 13 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள், 10 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள், 4 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் என 27 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருமே வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இதனால் என்.எல்.சி.யில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



என்.எல்.சி.யில் மொத்தம் 3 மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் முதல் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட்டும், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 400 மெகாவாட்டும், 2-வது அனல்மின் நிலையத்தில் 1470 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 



இவற்றின் மொத்த மின்உற்பத்தி திறன் 2470 மெகாவாட்டாகும். சராசரியாக தினமும் 2000 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறும். இவற்றில் 40 சதவீத மின்சாரம் வெளி மாநிலங்களுக்கும் மீதி மின்சாரம் தமிழ்நாடு மற்றும் நெய்வேலியில் மற்ற தேவைக்கும் பயன்படுத்தப்படும். 



அங்குள்ள சுரங்கங்கள் மூலம் தினமும் 10 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. 



இது தொடர்பாக அங்கீகரிகப்பட்ட தொழிற்சங்கமான தொ.மு.ச. பொது செயலாளர் ராசவன்னியன் கூறியதாவது:- 



அனைத்து ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் 3-ந் தேதி இரவே மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட தொடங்கிவிடும். அடுத்தடுத்த நாட்களில் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டு மின் உற்பத்தி அடியோடு நின்று விடும். 



என்.எல்.சி. பங்குகளை 5 சதவீதம் தமிழக அரசுக்கு விற்கவேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலித கூறியிருப்பது தொடர்பாக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கூடி பேசி எங்கள் முடிவுகளை அறிவிப்போம். 



இவ்வாறு அவர் பேசினார். 



அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு தொழிற்சங்கமான அண்ணாதொழிற்சங்க பொது செயலாளர் உதய குமார் கூறியதாவது:- 



3-ந் தேதி இரவு 10 மணி ஷிப்டு முடிந்ததும் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. உடனேயே அனைத்து பணிகளின் இயக்கமும் தானாக நின்றுவிடும். எந்த பணியும் செய்ய ஆட்கள் இருக்க மாட்டார்கள். பாய்லரில் நிலக்கரிகளை கொட்டுவது, மின் உற்பத்தி கருவிகளை இயக்குவது, உற்பத்தியாகும் மின்சாரத்தை பகிர்ந்தனுப்புவது போன்ற எந்த பணிகளும் நடக்காது. எனவே 4-ந் தேதியே மின் உற்பத்தி அடியோடு நின்று விடும். 



5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கே விற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருப்பதை அண்ணா தொழிற்சங்கம் வரவேற்கிறது. 



இவ்வாறு அவர் கூறினார். 



பொதுவாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டால் என்.எல்.சி. நிர்வாகம் உடனே அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்புவது வழக்கம். எனவே இன்னும் ஓரிரு நாளில் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை நோட் டீஸ் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click