அரசியல் கட்சியினர் மின்சாரத்தை திருடுகிறார்கள்: கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி புகார்


சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியம் பம்புசெட்டுகளுக்கும், குடிசைகளுக்கும் மின் கட்டணத்தை மாற்றியமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பொது மக்களிடம் கருத்து கேட்பு முகாம் நடத்துகிறது. இன்று சென்னையில் பாரிமுனையில் கருத்து கேட்பு முகாம் நடந்தது. மின்சார ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் வேணுகோபால், நாகல்சாமி, செயலாளர் குணசேகரன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள். மின்சார வாரிய பொறியாளர் அமைப்பின் தலைவர் காந்தி கூறியதாவது:-

மின்கட்டண உயர்வை இந்த ஆண்டு உயர்த்தாமல் அடுத்த ஆண்டு உயர்த்துவதாக திட்டமிடப்பட்டிருப்பதற்கு காரணம் பொதுத் தேர்தல் தான். மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை முறையாக பராமரிக்காததால் தனியார்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.14 முதல் ரூ.15 வரை வாங்குகிறார்கள். இதனால் கடந்த ஆண்டு 9300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 22 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளை சூரியஒளி மின் அமைப்புகளை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. 

காற்றாலை மின்உற்பத்தியை முறையாக கணக்கீடு செய்யாததாலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. நிர்வாக சீர்கேடு காரணமாகவே மின்வாரியம் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கிறது. அந்த நஷ்டத்தை பொது மக்கள் தலையில்தான் சுமத்துகிறது. தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களை தொடங்கும் போது வட மாநிலங்களில் தோல்வியை தழுவிய சீன தயாரிப்பு எந்திரங்களையே பயன்படுத்தியுள்ளனர். அதை எப்படி இங்கு அனுமதித்தார்கள் என்பது தான் புரியவில்லை. எனவேதான் மின் உற்பத்தி குறைந்து மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கிறோம். 

முனுசாமி (கோழி வளர்ப்பு விவசாயி):- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பும், விவசாய தொழில் போல்தான் நடைபெறுகிறது. கூலிக்காக கோழிகளை வளர்த்துக் கொடுப்பவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். 25 ஆயிரம் கோழி வரை வளர்ப்பதற்கு விவசாயத்தை போல் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். 

பொன் கணேசன்:- அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கும், திருமண மண்டபங்களிலும் ஏராளமான மின்சாரம் திருடப்படுகிறது. பல லட்சம் யூனிட் மின்சாரம் இவ்வாறு திருடப்படுகிறது. இதற்கு மின்வாரிய அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் சிறு தவறு செய்தாலும் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களில் மின்சாரம் திருடப்படுவதை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள். மின்சார பெட்டிகள் அனைத்தும் அவர்களுக்கு வசதியாக திறந்தே போடப்பட்டுள்ளன. 

ஜானகிராமன் (வி.ஐ.டி. பல்கலைக்கழகம்):- அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் கல்லூரிக்கு ரூ.5.50 வசூலிக்கப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு ஏன்? அரசு கல்லூரிகளும் நாங்களும் ஒரே பாடத்தைதான் நடத்துகிறோம். ஒரே சம்பளத்தைதான் வாங்குகிறோம். 

அதிகாரி (குறுக்கிட்டு)- கல்விக்கட்டணத்தில் வேறுபாடு உள்ளதா? 

ஜானகிராமன்:- ஆம். 

சிவகுமார் (விவசாயி):- அனைவருக்கும் ஒரே சீரான மின் கட்டணத்தை செயல்படுத்த வேண்டும். முறையாக மின்சாரம் அனைவருக்கும் கிடைக்க ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

இதே போன்ற கருத்து கேட்பு கூட்டம் வருகிற 8-ந் தேதி திருச்சியிலும், 10-ந் தேதி மதுரையிலும், 17-ந் தேதி கோவையிலும் நடைபெறுகிறது. கடந்த முறை கருத்து கேட்பு கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் இன்றைய கூட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click