ஓடி ஓடி களைத்தது அனல்மின் நிலையம்: ஆயுட் காலம் கடந்தும் ஓயாத உழைப்பு (தினமலர் – வெ, 19 ஏப்., 2013)


தூத்துக்குடி அனல்மின் நிலையம், 33 ஆண்டுகளையும் கடந்து, மின் உற்பத்தி செய்து வருகிறது. அங்கு, அடிக்கடி, இயந்திரப்பழுது ஏற்படுவதால், ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான, இந்த அனல்மின் நிலையத்தில், தலா, 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய, ஐந்து யூனிட்கள் உள்ளன. முதல் யூனிட், 1979ல் துவக்கப்பட்டது; 2வது யூனிட் 1980; 3வது யூனிட் 1982; 4வது மற்றும் 5வது யூனிட், 1991ம் ஆண்டுகளில், உற்பத்தியை துவக்கின. இதற்காக, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின், 17 சதவீத மின் தேவையை, இந்த அனல்மின் நிலையம் பூர்த்தி செய்கிறது.
அடிக்கடி பழுது: கடந்த ஒரு ஆண்டாக, அனல்மின் நிலையத்தில், மின் உற்பத்தி, பாய்லர்கள் பழுதாகி வருகின்றன. அதை சரி செய்து இயக்கும் போது, மற்றொரு யூனிட் பழுதாகி விடுகிறது. சில நேரங்களில், இரண்டு யூனிட்களில் பழுது ஏற்பட்டு, 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கிறது; இதனால், மின்வெட்டு நேரம் அதிகரிக்கிறது. சில நாட்களுக்கு முன், இதே போன்ற நிலை ஏற்பட்டு, பின், பழுது சரி செய்யப்பட்டது. இது தவிர, மின் உற்பத்திக்கான நிலக்கரியை, வ.உ.சி., துறைமுகத்தில் இருந்து, 4.5 கி.மீ., தூர, கன்வேயர் பெல்ட் ல் கொண்டுவரும் போது, நிலக்கரி உராய்வில், பெல்ட் தீப்பிடித்து, நாசமான சம்பவங்களும் நடந்தன. 
காரணம் என்ன: இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: இங்கு, ஒரு யூனிட்டில், 25 ஆண்டுகள் வரையே, மின் உற்பத்தி செய்ய வேண்டும். தற்போது, முதல் மூன்று யூனிட்கள், ஆயுட்காலத்தை தாண்டி, உற்பத்தி செய்கின்றன. அதேபோல, 4, 5வது யூனிட்களும், ஆயுட்காலத்தை நெருங்கி வருகின்றன. இதனால், அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கன்வேயர் பெல்ட்டில் நிலக்கரி கொண்டு வரப்படும் போது, அதில் தெளிக்க போதிய தண்ணீர் இல்லை; பராமரிக்க தேவையான பணியாளர்களும் இல்லை. எனவே, அடிக்கடி தீப்பிடிக்கிறது. இயந்திரங்களை ஒட்டுமொத்தமாக புதுப்பிப்பது அவசியம். இல்லை எனில், பழுதும், மின் உற்பத்தி பாதிப்பும் தொடர்கதையாகவே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அனல்மின் நிலைய தலைமைப் பொறியாளர் அர்த்தநாரி கூறியதாவது: இந்நிலையம், 33 ஆண்டுகளை கடந்து, 100 சதவீத மின் உற்பத்தியை செய்து வருகிறது. மின் உற்பத்தியின் போது, பாய்லரில், பஞ்சர் ஏற்படுவது வழக்கமானது தான். அவை, உடனுக்குடன் சரி செய்யப்பட்டு, மின் உற்பத்தி துவங்கப்படுகிறது. ஒரு யூனிட்டின், இயந்திரங்களை முழுமையாக மாற்றி, புதுப்பிக்க வேண்டுமானால், ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அவ்வாறு செய்யும் போது, அந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும். தமிழக அரசு அறிவுரைப்படி, ஆண்டுதோறும், இயந்திரங்களில் பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click