மின் தேவை திடீரென அதிகரிப்பதால் கூடுதல் மின்வெட்டு : மின் வாரியம்


சென்னை :"மின் தேவை திடீரென அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதல் மின் வெட்டு தவிர்க்க முடியாது; அதனால், முன்கூட்டியே அறிவிக்க இயலவில்லை' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) பதிலளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, "சிட்டிசன் கார்டியன்' அமைப்பின் நிர்வாகி, ரவிச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' விசாரித்தது.மாவட்டங்களில் மின் வெட்டு நேரம் எவ்வளவு, மின் வெட்டு குறித்த தகவலை, முன்கூட்டியே, மீடியாக்கள் மூலம், ஏன் தெரிவிக்கவில்லை என, விளக்கம் அளிக்க பெஞ்ச் உத்தரவிட்டது.


இவ்வழக்கில், டான்ஜெட்கோ இயக்குனர், ஜெயசீலன், தாக்கல் செய்த பதில் மனு:தமிழகத்தின் மின் தேவை, 11 ஆயிரம் முதல், 12 ஆயிரத்து 500 மெகாவாட். மின் திட்டங்கள், மின்சாரம் வாங்குவதன் மூலம், கிடைக்கும் மின்சாரம், 7,000 முதல், 8,000 மெகாவாட்.மின் தேவையையும், வினியோகத்தையும் இணைக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள், 2008ம் ஆண்டு, நவ., முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.தொழிற்சாலைகள், விவசாயம், வர்த்தகம், குடியிருப்புகள், இந்த மின் வெட்டைத் தாங்கிக் கொள்ள வேண்டும். உயர் அழுத்த மின்சார தேவையில், 40 சதவீத வெட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு, காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, சுழற்சி அடிப்படையில், மூன்று மணி நேரம், மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. சென்னையில், இரண்டு மணி நேரம், மின் வெட்டு உள்ளது. மின்சார இருப்பு, தேவையைப் பொறுத்து, மாநிலத்தின் மற்ற பகுதிகளில், கூடுதல் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.மின் இருப்பைப் பொறுத்து, விவசாயத்துக்கு, பகலில் ஆறு மணி நேரமும், இரவில், மூன்று மணி நேரமும், மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.நீர் மின் நிலையங்களில் இருந்து, 2,224 மெகாவாட் மின்சாரம், உற்பத்தி செய்யலாம். பருவ மழை பொய்த்ததால், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, நீர் மின்சார உற்பத்தி, 48 சதவீதமாக குறைந்துள்ளது.கூடங்குளம் அணுமின் நிலையத்தின், இரு யூனிட்டுகளும் (1,000 மெகாவாட்), 2007, 2008ம் ஆண்டுகளில் செயல்பட துவங்கியிருக்க வேண்டும். நெய்வேலி அனல் மின் நிலைய விரிவாக்க திட்டங்களும், 2009ம் ஆண்டில், செயல்பட துவங்கியிருக்க வேண்டும்.

இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய, 1,250 மெகாவாட் மின்சாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், மேட்டூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையத்தை, விரைந்து இயக்குவதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
மின் தேவை, வினியோகத்தை, நிர்வகிப்பதன் மூலம், வோல்டேஜ், அதிர்வெண் பராமரிக்கும் பொறுப்பு, மாநில வினியோக மையத்துக்கு உள்ளது. 

மத்திய மின் உற்பத்தி மையங்களிலும், மாநில மையங்களிலும், கட்டாய செயல் இழப்பு ஏற்படும் போது, மின் கட்டமைப்பை பாதுகாக்க, கூடுதல் மின் வெட்டு அமல்படுத்த வேண்டியதுள்ளது.மின் தேவை, வினியோகம் சீராக இருக்க வேண்டும். இல்லையென்றால், மின் கட்டமைப்பில் குளறுபடி ஏற்படும். எனவே, மின் வெட்டு தவிர்க்க முடியாதது.

தற்போதைய மின் உற்பத்தியானது, மின் தேவைக்கு இணையாக இல்லை. இதனால், மாவட்ட வாரியாக, மின் வெட்டு மேற்கொள்ளப்படவில்லை. சென்னை தவிர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள வினியோக பாதை, 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களுக்கு, நான்கு, நகர்ப்புறங்களுக்கு, ஆறு என, பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கு இடையே பாகுபாடு இல்லை.சென்னையில், சட்டசபை, தலைமைச் செயலகம், ஐகோர்ட், மாநில அரசின் தலைமை அலுவலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மருத்துவமனைகள், போலீஸ் தலைமை அலுவலகங்கள் உள்ளன. எனவே, முடிந்த வரை, சென்னையில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

சுற்றுலா, வர்த்தக மையமாக இருப்பதால், சர்வதேச சுற்றுலாப் பயணிகளும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இருந்து, சென்னைக்கு வருகின்றனர். எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு மணி நேரம், மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.கர்நாடக மாநிலத்தில், பெங்களூருவில், மின் வெட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேட்டூர், வல்லூர், வடசென்னை அனல் மின் திட்டங்கள் மூலம், வரும் மாதங்களில் மின்சார நிலைமை மேம்படும்.கட்டாய செயல் இழப்பு, திடீர் மின் தேவை போன்ற காரணங்களால், மின்வெட்டு குறித்து, முன்கூட்டியே அறிவிப்பு செய்ய முடியவில்லை. மற்றபடி, மின் தடை பற்றி, மீடியாக்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.படிப்படியாக, மின் வெட்டுப் பிரச்னையை குறைக்க, நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.விசாரணை, இரண்டு வாரங்களுக்கு, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மின் பழுது நீக்க உபகரணங்கள் இல்லை: அதிகரிக்கும் மின்வெட்டு:
மின் உபகரணங்கள் பற்றாக்குறையால், துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்க முடியாமல், மின் வாரிய ஊழியர்கள் திணறி வருகின்றனர். மின் கருவிகள் பழுதால், மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், 1,361க்கும் மேற்பட்ட, மிக உயரழுத்த மற்றும் உயரழுத்த துணை மின் நிலையங்கள் உள்ளன. மின்னழுத்தம், சீதோஷ்ண நிலை உட்பட பல்வேறு காரணங்களால், துணை மின் நிலையங்களில், அவ்வப்போது பழுது ஏற்படுகிறது.திடீரென ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, மின்வாரியம், போதிய அளவில் மின் உபகரணங்களை கொள்முதல் செய்து, கையிருப்பில் வைத்திருக்கும். ஆனால், கடந்த சில மாதங்களாக, மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யாததால், கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வாரியத்தில் நிலவும் மின் உபகரண பற்றாக்குறையால், நுகர்வோர் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் துணை மின் நிலைய பழுதுகளை, உடனே சரி செய்ய முடியாமல், ஊழியர்கள் திணறி வருகின்றனர்.மின் ஒயர், பியூஸ் ஒயர், இன்சுலேட்டர், பேட்டரி, எர்த் ஒயர் உட்பட முக்கிய உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு உள்ளது.தற்போது, மின் உபகரணங்கள் பற்றாக்குறையால், மின் பழுதை சரிசெய்ய முடியாமல், பல இடங்களில், மின்வெட்டு நேரம் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வாரியம், தற்போது, 40 சதவீத அளவிற்கே, மின் உபகரணங்களை வழங்குகிறது. கடந்த ஆறு மாதமாக, மின் உபகரண பற்றாக்குறை நிலவுகிறது. அன்றாட தேவையான, "பியூஸ்' ஒயர்களை கூட, வழங்காததால், பெரிய ஒயர்களில் இருந்து செம்பு கம்பிகளை பிரித்து,"பியூஸ்' ஒயராக, ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதன் காரணமாக, நுகர்வோர் தெரிவிக்கும் சிறிய புகார்களைக் கூட சரிசெய்ய, அதிக நேரம் தேவைப்படுகிறது. மின் உபகரண பற்றாக்குறையால், ஆய்வு பணியும் நடைபெறுவதில்லை. அதிகாரிகள் தாங்கள் மேற்கொள்ளும் ஆய்வு பணியின்போது, உபகரணங்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்று, ஊழியர்கள் கேட்பார்களோ என்ற அச்சத்தில், ஆய்வு பணிகளைத் தவிர்த்து வருகின்றனர்.அதேபோல், தரம் குறைந்த உபகரணங்களை கொள்முதல் செய்து, வாரியம் விநியோகிக்கிறது. இந்த கருவிகளை பொருத்தினால், வெப்பம் தாங்காமல், கருகி விடுகின்றன.கடந்த ஆண்டு, மின் இயக்கம் மற்றும் பராமரிப்புக்கு, 344 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த ஆண்டில், இத்தொகை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நிறுத்தம் :

வழக்கமான பராமரிப்பு பணிகள் போக, ஆண்டுக்கு இரு முறை, துணை மின் நிலைய கருவிகள் பழுது பார்க்கப்படும். அந்த பழுது பார்ப்பு பணிகளின் போது, மோசமான நிலையில் உள்ள கருவிகளை நீக்கிவிட்டு, புதிய கருவிகள் பொருத்தப்படும்.பராமரிப்பு மற்றும் பழுதடைந்த கருவிகள் மாற்றத்தால், துணை மின் நிலைய கருவிகளின் ஆயுட்காலம் அதிகரிக்கும். ஆனால், கடந்த ஓராண்டாக, துணை மின் நிலையங்களில், காலமுறை பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனால், மின் நிறுத்தத்திற்கு பின், மின் விநியோகம் செய்யும்போது, அதிலுள்ள கருவிகள் வெப்பம் தாங்காமல் கருகி விடுகின்றன என்கின்றனர் மின்வாரிய ஊழியர்கள்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click