சூரியசக்தி மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ஒரு வாரத்தில் டெண்டர் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் அறிவிப்பு


சூரிய சக்தி மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ஒரு வாரத்தில் டெண்டர் கோரப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் கே.ஞானதேசிகன் கூறினார்.
மின்தட்டுப்பாடு பிரச்சினைக்கு சூரியஒளி மின்சக்தி மூலம் தீர்வு காணும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த அக்டோபர் மாதம் புதிய சூரியஒளி மின்சக்தி கொள்கையை அறிவித்தார். அதன்படி, சூரியஒளி மின்திட்டம் மூலமாக ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் வீதம் அடுத்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ஆலோசனை கூட்டம்
முதல்கட்டமாக 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தியை எட்ட வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சூரியஒளி மின்சக்தி திட்ட பணியில் முழுக்க முழுக்க தனியார்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் கலந்துகொள்ள சூரியஒளி மின்சக்தி தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்களுக்கு பொது அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மின்சார வாரிய அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகளவில் இருந்தது. இதைத்தொடர்ந்து, 2 கட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத் தலைவர் ஞானதேசிகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
20 ஆண்டுக்கு ஒப்பந்தம்
புதிய சூரியஒளி மின்சக்தி கொள்கையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த அக்டோபர் மாதம் 20–ந்தேதி வெளியிட்டார். இந்த திட்டம் மூலமாக ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் வீதம் 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உயர்மின்அழுத்த நுகர்வோர்கள் 8 ஆயிரமும், குறைந்த மின்அழுத்த நுகர்வோர்கள் லட்சக்கணக்கிலும் இருக்கிறார்கள்.
முதல்கட்டமாக 1.1.2014–ல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் முதல் செய்யும் வகையில் டெண்டர் கோரப்படும். இதற்காக மின்உற்பத்தியாளர்களிடம் 20 ஆண்டு காலத்திற்கு மின்கொள்முதல் ஒப்பந்தம் (பி.பி.ஏ.) போடப்படும்.
குறைந்தது ஒரு மெகாவாட்
குறைந்தபட்சம் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் உற்பத்தி செய்துகொள்ளலாம். அதற்கு எவ்வித உச்சவரம்பும் கிடையாது. மின்உற்பத்தி நிலையம் அமைப்பது, அதற்குத்தேவைப்படும் நிலத்தை பெறுவது என அனைத்தையும் உற்பத்தியாளர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்முதல் செய்வது மட்டுமே மின்சார வாரியத்தின் பணி ஆகும்.
மின்சார கொள்முதல் இறுதி விலை டெண்டர் மூலமாக முடிவுசெய்யப்படும். கொள்முதல் கட்டணம் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற வீதத்தில் 10 ஆண்டுகளுக்கு உயர்த்தி வழங்கப்படும். அதன்பிறகு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது.
 சூரியஒளி மின்சக்தி தயாரிப்பு திட்டம் தொடர்பான பணிகளை கவனிப்பதற்காக மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி திட்டம்) ஒருவர் தனியாக இருப்பார். இந்த திட்டம் தொடர்பான விவரங்களை அவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
ஒரு வாரத்தில் டெண்டர்
மேலும், இந்த திட்டத்திற்கு ஒற்றைச்சாளர முறை அனுமதி (சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ்) வழங்குவதற்காக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த முகமையின் நிர்வாக இயக்குனரை அணுகியும் விவரங்கள் பெறலாம்.
சூரியமின் சக்தி தயாரிக்கும் திட்டம் தொடர்பான டெண்டர் (ஒப்பந்தப்புள்ளி) ஒரு வாரத்தில் கோரப்படும். அதைத்தொடர்ந்து, தொழில்நுட்ப தகுதிப்புள்ளி, விலைப்புள்ளி பெறப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும். இறுதியில், குறைந்தபட்ச விலை ஏற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click