தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012 : முதல்வர் வெளியிட்டார்


    தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” என்ற ஆவணத்தை வெளியிட்டார்.

    இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சூரிய சக்தியானது, மனித குலத்திற்கு தூய்மையானதும், சுற்றுப்புறச் சூழலை மாசு ஏற்படுத்தாததும், அளப்பரியதும் மற்றும் குறைவற்ற எரிசக்தி ஆதாரம் ஆகும்.   சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் திட்டத்துடன் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
    எரிசக்தி பாதுகாப்பு, சூரிய சக்தியை கொண்டு 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் உள்நாட்டிலேயே சூரியசக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி ஆகியவை சூரிய சக்திக் கொள்கையின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.  உத்தேசித்துள்ள 3000 மெகாவாட் மின் உற்பத்தியில் 2013, 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக அரசால் திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012 என்ற கொள்கை ஆவணத்தை முதலமைச்சர் இன்று  வெளியிட்டார்.
    தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012-ன் சிறப்பு அம்சங்கள்:
    சூரிய சக்தி பூங்காக்களை உருவாக்குதல்.
    வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் மேற்கூரை சூரியசக்தி அமைப்புக்களை நிறுவ ஊக்குவிக்கும் வகையில் மின் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை அளித்தல்.
    அனைத்து புதிய அரசு கட்டடங்கள் / உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.
    தற்போதுள்ள அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது படிப்படியாக செயல்படுத்தப்படும்.
    உள்ளாட்சி நிறுவனங்களின் அனைத்து தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வழங்கும் அமைப்புகள் படிப்படியாக சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும்.
    பெரும் தொழிற்சாலைகள் மற்றும் உயர் அழுத்த மின் நுகர்வோர் குறிப்பிட்ட சதவீத மின்சாரத்தை சூரிய சக்தி மின்சாரத்திலிருந்து பயன்படுத்த வேண்டும்.
    சூரிய சக்தி சாதனங்களைத் தயாரிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
    சூரிய சக்தி மின் உற்பத்தி தயாரிப்பாளர்களுக்கு கீழ்க்கண்ட முனைப்பான கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
    அ) நிகர அளவியல்
    ஆ) மின்சாரவரி செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்
    இ) EB மின்தேவை வெட்டிலிருந்து விலக்களித்தல்
    இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றம் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    No comments:

    Card Billing staff working hour

     Card Billing staff working hour     Click